

ஆம்பூர்,
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டியது. ஆம்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. 2-வது நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்து கொண்டே உள்ளது.
நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ரெட்டித்தோப்பு பகுதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதன் காரணமாக துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியே தனித்தீவு போல் மாறியது.
விண்ணமங்கலம் ஊராட்சி பகுதிகளில் கொட்டிய பலத்தமழையால் கானாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சரிவர தூர்வாரப்படாத காரணத்தால் அதில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது. இதனால் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
விண்ணமங்கலம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீரோடு, சேர்ந்து மழைநீரும் கலந்து 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளதாகவும், அதிகாரிகள் அலட்சிய போக்கே காரணம் என கூறி 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொட்டும் மழையில் கையில் குடைகளுடன் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
கானாற்று வெள்ளத்தால் பெரியவரிகம், கீழ்மிட்டாளம், மின்னூர், அறிவொளி நகர் ஆகிய பகுதியில் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகளும், கைலாசகிரி பகுதியில் 5-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளும் இடிந்து விழுந்தது. சாணிக்கணவாய், பைரப்பள்ளி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு இருந்த சிறு தடுப்பணைகள் கானாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
அங்கு கட்டப்பட்டிருந்த அம்மா பூங்காவின் சுற்றுச்சுவரும், மாச்சாம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. பள்ளிக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்தது.
பலத்த மழையால் திருப்பத்தூர் அருகே ஏலகிரிமலை அடிவார பகுதியில் உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. அங்குள்ள விநாயகர் கோவில் வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.