பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது

நெல்லையில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது
Published on

நெல்லையில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆயுதங்களுடன் பதுங்கிய கும்பல்

நெல்லை மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல நத்தம் ரெயில்வே கேட் அருகில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே, போலீசார் அதிரடி நடவடிக்கையாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரைக் கண்டதும், அங்கு பதுங்கி இருந்த கும்பல் தப்பி ஓடியது. எனினும் அவர்களை போலீசார் விரட்டிச் சென்று, 2 பேரை மடக்கி பிடித்தனர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள், பாளையங்கோட்டை இலந்தைகுளத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் சிவபெருமாள் (வயது 25), பாளையங்கோட்டை புதுபேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து (25) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த அரிவாள், வாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

3 பேருக்கு வலைவீச்சு

மேலும், தப்பி ஓடி தலைமறைவான பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியை சேர்ந்த நம்பிராஜன், மகேஷ், குலவணிகர்புரத்தைச் சேர்ந்த மார்ட்டின் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இவர்கள் யாரையும் கொலை செய்வதற்காக பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக பதுங்கினரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com