அமெரிக்காவின் “பொருளாதாரப் போர்”: நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்வு காண வேண்டும் - வைகோ வலியுறுத்தல்


அமெரிக்காவின் “பொருளாதாரப் போர்”: நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்வு காண வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x

கோப்புப்படம்

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருந்துத் துறைதான் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் ஏற்றுமதிதுறை என உலக வர்த்தக ஆய்வு முயற்சி என்ற வணிக ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு சுமார் 12.7 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.

ஆனால், இந்த மருந்துகளில் பெரும்பாலானவை ஜெனரிக் மருந்துகள் ஆகும். ஒரு புதிய மருந்தை கண்டறிந்த நிறுவனம் அதற்கான உரிமையைப் பெற்றிருக்கும். இதுவே, பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துகள் எனப்படும். இந்த மருந்தை அந்தக் குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே தயாரித்து சந்தையில் விற்க முடியும். இந்த உரிமைக்கான காலம் சுமார் 20 ஆண்டுகள்.

ஜெனரிக் மருந்துகள் என்பது, காப்புரிமை காலம் முடிந்த பிறகு தயாரிக்கப்படும் மருந்துகள். இதை எந்த நிறுவனம் வேண்டுமானாலும் தயாரித்து சந்தையில் விற்கலாம். அமெரிக்காவிற்கு பிராண்டட் மருந்துகளும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனினும் ஜெனரிக் மருந்துகளின் எண்ணிக்கையை விட இது குறைவுதான்.

டாக்டர் ரெட்டிஸ், லுபின், சன் பார்மா போன்ற இந்திய நிறுவனங்களின் மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதிமுதல் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவை மையமாகக் கொண்டு உற்பத்தி ஆலை இல்லாத அனைத்து நிறுவனங்களின் மருந்துகளுக்கும் இது பொருந்தும் என்றும், அமெரிக்காவுக்குள் ஆலை கட்டுமானப் பணிகளைத் தொடங்கினால் வரி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மருந்துகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் இறக்குமதி வரியால் இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. கடந்தாண்டு அமெரிக்காவுக்கு ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகளை இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்துள்ளன. இந்தாண்டின் முதல் பாதியில் மட்டும் ரூ. 32 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், சமையலறை மற்றும் கழிப்பறை பொருள்களுக்கு 50 சதவீதம், பர்னிச்சர் பொருள்களுக்கு 30 சதவீதம் மற்றும் கனரக லாரிகளுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பின்போதே ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும்’ என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்து இருந்தார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவை பிறப்பித்தார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு நூறு விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருப்பது இந்தியத் தொழில்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க அரசின் “பொருளாதாரப் போர்” குறித்து விவாதித்து முடிவெடுக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு உடனடியாக கூட்ட வேண்டும். அமெரிக்காவின் நெருக்கடிகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story