காஷ்மீரில் இனி தீவிரவாதம் ஒழியும் என நம்புகிறேன்: உள்துறை அமைச்சர் அமித்ஷா

காஷ்மீர் மசோதாவை வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமையால் மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றினோம் என்று அமித்ஷா தெரிவித்தார்.
காஷ்மீரில் இனி தீவிரவாதம் ஒழியும் என நம்புகிறேன்: உள்துறை அமைச்சர் அமித்ஷா
Published on

சென்னை,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் பணி குறித்த ஆவணப் புத்தகம் ஒன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புத்தகத்தினை வெளியிட்டார். பின்னர் அமித்ஷா பேசியதாவது:- தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தமிழ் கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். ஆனால், பணிகள் காரணமாக என்னால் கற்றுக்கொள்ள முடியவில்லை. விரைவில் தமிழில் பேசுவேன்.

வாழ்நாள் முழுவதும் மக்கள் பணியிலேயே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு பணியாற்றி இருக்கிறார். அவருடைய மாணவன் என்ற முறையிலேயே நான் இங்கு வந்திருக்கிறேன். தனது வாழ்நாளில் எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்கு உதராணம் வெங்கையா நாயுடு.

கல்வி முதல் துணை குடியரசு தலைவரானது வரை அவரது வாழ்க்கை இளைஞர்களுக்கு உதாரணம். ஆர்.எஸ்.எஸ் கொள்கையை பொதுவாழ்வில் பயன்படுத்துவதில் அவர் ஒரு உதாரணம். வெங்கையா நாயுடு பல்வேறு பதவிகளை கடந்து இந்த நிலைமைக்கு வந்துள்ளார். நெருக்கடி நிலை கால கட்டத்தில் சிறையில் இருந்தவர் வெங்கையா நாயுடு. பாஜகவின் பல்வேறு பொறுப்புகளை கடந்து மாநிலங்களவை தலைவராகி இருக்கிறார்.

உழைப்பே உயர்வு என்பதற்கு வெங்கையா நாயுடுவின் வாழ்க்கையே சிறந்த உதாரணம். காஷ்மீர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதில் வெங்கையா நாயுடுவின் சீரிய தலைமை முக்கிய காரணம். கடும் எதிர்ப்பு எழுந்தும் நியாயமாக இருந்து சட்டம் நிறைவேற உறுதியாக இருந்தவர் வெங்கையா நாயுடு. இவ்வாறு அவர் பேசினார். காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய அமித்ஷா, சட்டப்பிரிவு 370 முன்பே ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்பினேன். உள்துறை அமைச்சராக எனது மனதில் எந்த குழப்பமும் இல்லை. காஷ்மீரில் தீவிரவாதம் ஒழியும் என நான் உறுதியாக நம்புகிறேன். காஷ்மீர் வளர்ச்சிப்பாதைக்கு செல்லும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com