அமித்ஷா வராத விரக்தியில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசுகிறார் டி.டி.வி.தினகரன் பேட்டி

அமித்ஷா வராத விரக்தியில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசுகிறார் என டி.டி.வி. தினகரன் கூறினார்.
அமித்ஷா வராத விரக்தியில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசுகிறார் டி.டி.வி.தினகரன் பேட்டி
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளரான டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு கட்சியில் தலைவர் மறைந்த பின்னர் வேறு ஒருவர் தலைவராக பதவி ஏற்பார். அந்த அடிப்படையில் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று உள்ளார்.

மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகளாக அரசியலில் இருந்து உள்ளார். கருணாநிதி இருந்தபோதே அவர் அடுத்தகட்ட தலைவராக அறிமுகம் செய்யப்பட்டார். இதில் வாரிசு அரசியல் இருக்கிறதா, உழைப்பால் வந்தாரா, இல்லை கருணாநிதி மகனாக இருந்ததால் வந்தாரா, திணிக்கப்பட்ட தலைவரா, இல்லை தானாக வந்த தலைவரா என்பதெல்லாம் வருங்கால அரசியல் மற்றும் தேர்தல் களத்தின் செயல்பாடுகளில் இருந்துதான் தெரியவரும்.

மு.க.ஸ்டாலின் எதுவும் தெரியாத மாதிரி இன்றுதான் தெரியவந்தது போல், பகல் கொள்ளை நடக்கும் ஆட்சி, திருடர்கள் ஆட்சி என்று பேசி உள்ளார்.

கருணாநிதிக்கு அண்ணா சமாதியில் இடம் வேண்டும் என்றால் முதலிலேயே நீதிமன்றம் சென்று இருக்கலாம். காமராஜர் இறந்தபோது முதல்- அமைச்சராக இருப்பவர்களுக்குத்தான் மெரினாவில் இடம் என்று கருணாநிதி கூறியதாக கூறப்படுகிறது. அண்ணா சமாதியில் இடம் வேண்டும் என்று கருணாநிதி ஆசைப்பட்டார் என்பதற்காக முதல்- அமைச்சரை சந்தித்ததாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

எடப்பாடி பழனிசாமி பற்றி தெரிந்துகொண்டு, அவரது கையைப் பிடித்து கெஞ்சினேன் என்று கூறுவது தலைமை பண்புக்கு அழகா?

வாஜ்பாய் மறைவுக்கு சென்றிருந்தபோது மு.க.ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் அமித்ஷாவுக்காக காத்திருந்து சந்தித்தனர். அப்போது கருணாநிதி புகழ் அஞ்சலிக்கு, அமித்ஷா வருவதாக கூறிவிட்டு தற்போது வேறு ஒருவரை அனுப்பி வைக்கிறார்கள்.

இதனால் கோபமான மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் காவிமயம் ஆவதை விட மாட்டோம் என்று விரக்தியில் பேசுவது வெளிப்படுகிறது. இது தலைமைக்கான பண்பாக தெரியவில்லை.

மறைமுகமாக கூட்டணி அமைத்து பார்த்தனர். அந்த கூட்டணி அமையாத விரக்தியில்தான் பேசுகின்றனர். அ.தி.மு.க.வை பாரதீய ஜனதா இயக்குவது உண்மை. ஆனால் பாரதீய ஜனதா உதவியுடன் ஆட்சி அமைக்க தி.மு.க. நினைத்து இருக்கலாம். தி.மு.க. நினைத்தது நிறைவேறாததால் பேசி இருக்கலாம்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர்கள் கூறுவது, படங்களில் நடிக்காத வடிவேல் இடத்தை அமைச்சர்கள் நிரப்புவது ஆகும்.

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்தான். இந்த முறை தி.மு.க. விழித்துக்கொள்ளும் என்பதால் இடைத்தேர்தலில் 2-வது இடத்தை பிடிக்கும். ஆர்.கே.நகர் தொகுதி போல் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும் என்று நம்புவதால் அதற்கான பணிகளை செய்து வருகிறோம். கூட்டணி அமைந்ததும் தெரிவிக்கப்படும். தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மக்கள் டெபாசிட் வழங்க மாட்டார்கள்.

அரசியலில் எது வேண்டும் என்றாலும் நடக்கும் என்பதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி நடக்காது. தொண்டர்கள் ஏற்காத விஷயங்கள் நடக்காது. தற்போதைய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வந்தால் ஏற்க மாட்டோம். அவர்கள் வரமாட்டார்கள். ஆனால் அவர்கள் எங்கு போவார்கள் என்று தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com