

காரைக்கால்,
மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 11 மணி அளவில் திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். வரவேற்பு முடிந்த பின்னர் அமித்ஷா திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து தங்கினார். அமித்ஷாவுடன் மத்திய மந்திரிகள் எல். முருகன், மன்சுக் மாண்டவியா ஆகியோரும் வந்து இருந்தனர்.
இந்நிலையில் பா.ஜனதா கட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், புதுவை மாநிலம் காரைக்காலில் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் காலை 11 மணியளவில் அமித்ஷா வந்து இறங்குகிறார்.
பின்னர் அங்கிருந்து பாரதியார் சாலை மற்றும் திருநள்ளாறு சாலை வழியாக சென்று, நகராட்சி சந்தை திடலில் 11.30 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். முன்னதாக சுவர் விளம்பரம் ஒன்றை தன் கையால் வரைந்து தொடங்கி வைக்கிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஓட் டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் காரைக்கால் பா.ஜனதா கிளை கமிட்டி நிர்வாகி ஒருவர் இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைக்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலை 4 மணிக்கு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். அமித்ஷாவின் வருகையையொட்டி சாலை முழுவதும் பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
பொதுக்கூட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று கூறப்படு கிறது. பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 7 பட்டாலியன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள். 6 இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.