“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்“ தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்- டிடிவி தினகரன் சபதம்

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்“ என்ற பெயரில் இனி நாம் செயல்படுவோம். இந்த இயக்கம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என தினகரன் கூறினார். #TTVDhinakaran #AmmaMakkalMunneraKazhagam
“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்“ தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்- டிடிவி தினகரன் சபதம்
Published on

மதுரை

மதுரை மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பெயரை அறிவித்து டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

கடந்த ஆண்டு மார்ச் 22-ந் தேதி துரோகிகள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் கொடுத்த மனுவால் தேர்தல் ஆணையம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரையும், நமது வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தையும் முடக்கிவிட்டு நீங்கள் கட்சியின் பெயரை தெரிவியுங்கள். அதில் செயல்பட அனுமதிக்கிறோம் என்றது.

அதன் பேரில் கழக பொதுச் செயலாளர் சின்னம்மா அனுமதியுடன் அ.தி.மு.க. அம்மா என்ற பெயரில் இயங்க தொடங்கினோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அம்மா என்ற பெயரிலேயே நாம் இயங்கி தொப்பி சின்னத்தில் நான் போட்டியிட்டேன்.

தேர்தலுக்கு பிறகும் அதே பெயரில் நாம் செயல் படதேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் சின்னம்மா தலைமையில் செயல்பட்டோம். ஆனால் கடந்த நவம்பர் 23-ந் தேதி தேர்தல் ஆணையம் ஒரு தீர்ப்பை வழங்கியது. மதுசூதனன் அன் கோ இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் பயன்படுத்தலாம் என்றும் நான் அதனை பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவித்தது. இதனால் கடந்த 6 மாதங்களாக நாம் கட்சி பெயரின்றி செயல்பட்டோம்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் கூட குக்கர் சின்னத்தில் நான் சுயேட்சையாக போட்டியிட்டேன். அங்கு உதய சூரியனுக்கு டெபாசிட் பறிபோனது. இரட்டை இலை தப்பித்தவறி பிழைத்தது. பதிவான வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை நாம் பெற்றோம். இது மக்களின் வெற்றி.

அதன் பிறகு கடந்த 4, 5 மாதங்களாக எந்த நிகழ்ச்சியை நடத்தினாலும் கட்சியின் பெயர் இல்லாமல் சிரமப்பட்டோம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

1.5 கோடி தொண்டர்களும் கட்சியின் பெயரின்றி எத்தனை காலம் சிறப்பாக செயல்பட முடியும். இதற்காக தான் டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கில் கடந்த 9-ந் தேதி டெல்லி கோர்ட்டு தீர்ப்பை வெளியிட்டது. தினகரன் கேட்கும் கட்சி பெயரையும், குக்கர் சின்னத்தையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

வருங்காலங்களில் இனி எந்த தேர்தலாக இருந்தாலும் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கும் வரை அது கூட்டுறவு தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி குக்கர் சின்னத்தை பயன்படுத்தி போட்டியிடலாம்.

அ.இ.அ.தி.மு.க. என்ற இயக்கத்தை மீட்டெடுக்கும் வரை நாம் செயல்பட புதிய இயக்கம் பெயரை இங்கு அறிவிக்க உள்ளேன். கழக பொதுச் செயலாளர் சின்னம்மா அனுமதியுடன். புரட்சித்தலைவி அம்மா ஆசியுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் இனி நாம் செயல்படுவோம். இந்த இயக்கம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எம்.ஜி.ஆரின் வாரிசுகளாகிய நாம் செயல்பட உள்ளோம். எந்த தேர்தல் வந்தாலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு நாம் வெற்றி பெறுவோம்.

இந்த நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்ற உறுதியையும் நாம் ஏற்க வேண்டும். அ.தி.மு.க. இயக்கத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் துரோகிகளிடம் இருந்து மீட்டெடுப்போம்.

4 மாதங்களாக கட்சியின் பெயர் இல்லாமல் செயல்பட்ட நாம், இனி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் செயல்படுவோம். எந்த தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

தமிழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசுகள், சமூக நீதி காத்த வீராங்கனை, இதய தெய்வம் அம்மா அவர்களின்பெயரால் இந்த இயக்கம் சீரோடும், சிறப்போடும் தொடர்ந்து சிறப்பாக செயல்படும்.

அம்மா மக்கள் முன் னேற்ற கழகம், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த உருவமாக விளங்கும் அம்மாவின் ஆசியோடு இனி தொடர்ந்து செயல்படுவோம்.

கட்சி பெயரை தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு செய்தனர். கட்சியின் கொடியை தஞ்சை மாநகர 39-வது வட்டச் செயலாளர் வெங்கட்ரமணி தேர்வு செய்தார்.

ஏழை, எளிய மக்களின் வாழ்வை மீட்கவும், காவிரி பிரச்சினையானாலும் சரி, தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சினையானாலும் சரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவோம்.

தமிழகத்திற்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகம் பொருளாதாரம், தொழில் துறையில் சிறந்த மாநிலமாக உருவாக, அம்மாவின் கனவை நனவாக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com