

சென்னை,
எடப்பாடி பழனிசாமி:- தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு நகை வைத்து கடன் வாங்கியவர்களின் கடன்தொகை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, குறைவான அளவிலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி:- 5 பவுனுக்கு கீழே நகைகள் வைத்த 13 லட்சத்து 40 ஆயிரம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 பவுனுக்கு மேல் நகை வைத்து கடன் வாங்கியவர்களின் கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று நாங்கள் சொல்லவில்லை. ஒரே ஆதார் அட்டை எண்ணை வைத்து 100-க்கு மேல் கடன்கள் வாங்கப்பட்டுள்ளது. 21 லட்சம் பேர் குறுக்கு வழியில் கடன்பெற முயன்றனர். அவர்களுக்கு தர முடியாது. தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அதற்கான தொகை ஒதுக்கி அவர்களின் நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படும்.
அம்மா உணவகம்
எடப்பாடி பழனிசாமி:- தற்போது, அம்மா உணவகங்களில் ஆள் குறைப்பு செய்யப்படுகிறது. சம்பளமும் குறைத்து வழங்கப்படுவதுடன் பொருள்களும் குறைவான அளவிலேயே ஒதுக்கப்படுகிறது.
அமைச்சர் கே.என்.நேரு:- அம்மா உணவகத்தில் ரூ.1,700-க்கு விற்பனையாகும் கடைகளில் 30 பேர் வேலை பார்க்கிறார்கள். எனவே, அவர்களை வேலையை விட்டு அனுப்பாமல் சுழற்சி முறையில் வேலை வழங்கப்படுகிறது.
மூடினால்தான் என்ன?
அவை முன்னவர் துரைமுருகன்:- அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன?. தலைவர் கருணாநிதி கொண்டுவந்த எத்தனையோ திட்டங்களை நீங்கள் மூடிவிட்டீர்கள். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்று எத்தனையோ சொல்லலாம். நாங்கள் ஒன்றைத்தானே மூடினோம்.
எடப்பாடி பழனிசாமி:- நீங்களே இப்படி பேசலாமா?. மூடினால் அதற்கான பலனை அனுபவிப்பீர்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- தலைவர் கருணாநிதி பெயரை மூடிமறைத்ததால்தான் மக்கள் உங்களுக்கு தண்டனை வழங்கியிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி:- அம்மா மினி கிளினிக் 1900 இடங்களில் தொடங்கினோம். மக்களிடம் கருத்து கேட்போம். அதை வேண்டாம் என்று சொன்னால் நிறுத்திவிடுவோம்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- அம்மா மினி கிளினிக்கில் மேஜை, நாற்காலியை தவிர எதுவும் இல்லை. அது அம்மா மினி கிளினிக் அல்ல, சும்மா மினி கிளினிக்.
அமைச்சர் எ.வ.வேலு:- கலைஞர் காப்பீட்டு திட்டத்தை நீங்கள் என்ன செய்தீர்கள். இப்போது எப்படி உள்ளது?
அரசின் கொள்கை முடிவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- அம்மா மினி கிளினிக்கை பழிவாங்க நிறுத்தவில்லை. கலைஞர் காப்பீடு திட்டம் மக்களுக்கு பயன்பட்டது. இந்த கிளினிக்கில் உள்கட்டமைப்பு வசதியே இல்லை. தற்போதைய நிதி ஆதாரத்தை பொருத்து, அது தேவை இல்லை என்று அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி:- ஆன்லைன் சூதாட்டத்திற்கான தடை அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால், சிலர் கோர்ட்டுக்கு சென்றதால், ரத்து செய்யப்பட்டது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான புதிய சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்.
அமைச்சர் ரகுபதி:- ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. தற்போது, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம்.
காற்றுபோன பலூன்
எடப்பாடி பழனிசாமி:- காற்று இல்லாத பலூன் போல கவர்னர் உரை சுருங்கிவிட்டது. எந்தவிதமான மக்கள் நல திட்டங்களும் இல்லை. மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வாக்களித்த மக்கள் தலையில் வைக்கப்பட்ட காகிதப்பூ.
இவ்வாறு விவாதம் நடந்தது.