

சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி, தி.மு.க. ஆட்சி அமையப்போகிறது என்ற செய்தி வந்த சில நாட்களிலேயே, தி.மு.க.வினரின் வன்முறையும், அரசியல் அநாகரீகமும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.
உலகமே வியந்து நோக்கி, எல்லா நாடுகளும் பின்பற்ற வேண்டிய கருணைமிகு திட்டம் என்று பாராட்டும் அம்மா உணவக திட்டத்தை ஜெயலலிதா ஏற்படுத்தினார். சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகம் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தி இருப்பது ஒருபோதும் ஏற்புடையது அல்ல.
பெருமழை, பெருவெள்ளம் தொடங்கி, கொரோனா பேரிடர் காலங்கள் வரை உணவின்றி தவித்தோரின் பசிப்பிணி நீக்கிய அட்சய பாத்திரமாம் அம்மா உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும். ஜெயலலிதா படத்தினை சேதப்படுத்தி உள்ளதும் வேதனை அளிக்கிறது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பை சீர்குலைப்போர் மீது உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.