கோவில் கட்ட பள்ளம் தோண்டியபோது அம்மன் சிலைகள் கண்டெடுப்பு

உலோகத்தால் ஆன 2 அம்மன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
கோவில் கட்ட பள்ளம் தோண்டியபோது அம்மன் சிலைகள் கண்டெடுப்பு
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா வேலங்குடி ஊராட்சி வடகரை மாத்தூர் பகுதியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் கோவிலை புதிதாக கட்ட முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். அப்போது மண்ணுக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், சத்தம் வந்த இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது உலோகத்தால் ஆன 1 அடி உயரமுள்ள அம்மன் சிலை ஒன்றும், 1 அடி உயரம் உள்ள அம்மன் சிலை மற்றும் பூஜை பொருட்களும் இருந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக அந்த பகுதி மக்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த நன்னிலம் தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள், 2 அம்மன் சிலைகளையும், பூஜை பொருட்களையும் பார்வையிட்டனர். இதுகுறித்து தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பின்னரே சிலைகளும், பொருட்களும் எந்த காலத்தை சேர்ந்தவை?. அவை ஐம்பொன் சிலைகளா? என்பது தெரிய வரும். இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அம்மன் சிலைகளை வணங்கி சென்று வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com