அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்: தி.மு.க.வில் இணைகிறாரா..?

அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மாணிக்க ராஜா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வில் இணைகிறாரா..?
இந்நிலையில் பா.ஜ.க.-வுடன் கூட்டணி அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமமுக துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா தி.மு.க.-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் தி.மு.க.-வில் இணைவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






