

சென்னை,
அமமுகவின் 9-வது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உங்களில் ஒருவனாக நான் எழுதும் மடல்...
அமைதி ---ஆக்கம் நல்வளர்ச்சி நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழகம் மற்றும் தமிழக மக்கனின் வளர்ச்சியையே தன் உயிர்மூச்சாகக் கருதிய இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் வரலாற்றுப் பெயரை நமது கழகத்தின் பெயராகவும், மலரும் புன்னகையுடன் கூடிய அம்மாவின் திருவுருவத்தைக் கழகத்தின் கொடியிலும் ஏந்தியுள்ள நமது “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்", தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக, தனது எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து "ஒப்பில்லா ஒன்பதாம் ஆண்டில்” அடியெடுத்து வைக்கிறது.
2018 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி, மதுரை மேலூரில் லட்சோப லட்சம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட நமது இயக்கம், அதன் ஆணி வேர்களாகிய உங்களின் அளப்பரிய உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் இயக்கத்தை எந்தவித தொய்வுமின்றி முன்னோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.
நம்முடைய கழகத்தின் அடித்தளத்தை வலுவாக அமைத்துக் கொடுத்த அன்புச் சகோதரர்களான மேலூர் சாமி, செயல்வீரர் வெற்றிவேல், நம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் பணிகள் நம்முடைய கழகத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நேரமும், காலமும் நெருங்கிவிட்டது.
"துயர் உறும் மாந்தர்களைக் கண்டபோதெல்லாம் அவர் தம், துயர் களைய உள்ளம் துணிய வேண்டும் என்பது தான் மனித இயல்பு." அதற்கு ஏற்ப மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் காலமாக இருந்தாலும், திமுக அரசில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட செயற்கை பிரச்சினைகளாக இருந்தாலும், மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எப்போதும் கொண்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துவமிக்க அடையாளம் கொண்ட மாபெரும் இயக்கமாகத் தமிழக மக்கள் மத்தியில் உருவெடுத்திருக்கிறது.
அம்மாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகரில் தொடங்கிய நம்முடைய வெற்றிப் பயணம், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று மக்கள் மனங்களை வென்று அவர்களின் நல்லாதரவை நிரூபித்துக் காட்டினோம். அடுத்தடுத்து நடைபெற்ற ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் வெற்றிவாகை சூடி முக்கிய பொறுப்புகளை நமது கழக நிர்வாகிகள் அலங்கரித்துக் காட்டினர். 2024 ஆம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையில் ஏற்ற வேண்டும் என்ற நம் ஒற்றை குறிக்கோளை அடைய கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உழைப்பு அளப்பரியது.
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற ஐந்தாண்டுகளில் கொலைகளும், கொள்ளைகளும் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்குச் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. அரசு நிர்வாகத்தின் அடிமட்டத்தில் தொடங்கி மூத்த அமைச்சர்கள் மீது வரை ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் மலைபோல் குவிந்துள்ளன. விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வாலும், பன்மடங்கு உயர்த்தப்பட்ட வரிகளாலும், கட்டணங்களாலும் தமிழக மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஐந்து லட்சம் கோடி கடனை வாங்கி குவித்து இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகத்தை முதலிடத்தில் கொண்டுவந்துவிட்டு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என புதுப்புது கதையை உருட்டிக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் கூட்டணிக்காக மாநிலத்தின் உரிமைகளையே விட்டுக் கொடுக்கத் துணிந்த திமுக அரசால் அண்டை மாநிலங்கள் தமிழகத்தைக் கூறு போட்டுக் கொண்டிருக்கின்றன.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வாரி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளையே இன்னமும் நிறைவேற்றாத திமுகவால், தமிழகமே போராட்டக் களமாக மாறியிருக்கும் நிலையில், தற்போது "உங்கள் கனவை சொல்லுங்கள்" எனும் பெயரில் அடுத்த தேர்தலுக்கான பொய் வாக்குறுதிகளை மக்கள் முன் வைக்கத் தொடங்கிவிட்டது.
மகளிர் உரிமைத் தொகை எனும் பெயரில் மாதந்தோறும் 1,000 ரூபாயும், இத்தனை ஆண்டுகளாக வராத கோடைக் காலம் தற்போது மட்டும் வந்தது போலச் சிறப்புத் தொகையாக 2,000 ரூபாயும் வழங்கிவிட்டால் தமிழகத்தில் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களை மறந்து மகளிர் அனைவரும் மீண்டும் தங்களுக்கே வாக்களிப்பார்கள் என்ற திமுகவின் தீய எண்ணத்திற்கும், சிந்தனைக்கும் வரும் தேர்தலில் ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து தகுந்த பதிலடி கொடுக்கப்போவது நிச்சயம்.
வெற்றி என்பது ஒரு நாளில் அடைந்து விட்டு மறுநாளில் மறந்து போகும் இலக்கு அல்ல. அது ஒரு தொடர் பயணம். அந்தப் பயணத்தின் அடிப்படையில் நமக்கான இலக்கை அடையும் நேரம் நெருங்கிவிட்டது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் நல்லாட்சியைத் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒற்றுமையோடும், ஒருங்கிணைப்போடும் களப்பணியாற்றிடுவோம். ஏமாற்றுவது, வஞ்சிப்பது, துரோகம் இழைப்பது ஆகிய மூன்றையே தன் கொள்கைகளாகக் கொண்டு தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் திமுகவை வரும் சட்டமன்றத் தேர்தலின் மூலம் நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்பிடுவோம்!
நமது லட்சியம் உயர்வானது ! பார்வை தெளிவானது!! வெற்றி முடிவானது!!!”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.