அமோனியா வாயு கசிவு விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்வு

வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்ட 42 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமோனியா வாயு கசிவு விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்வு
Published on

சென்னை,

அமோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

அமோனியா வாயு கசிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப் பேர் கிராமத்தில் கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு விபத்து ஏற்பட்டது. இதில் 74 வடமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு 2 தனியார் மற்றும் 2 அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரை 9 வடமாநில பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 5 பேரின் உடல்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது சொந்த மாநிலத்துக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

பலி எண்ணிக்கை உயர்வு

நேற்று சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒடிசாவை சேர்ந்த வடமாநில பெண் தொழிலாளி சுபாசி ஜூவாங்ஸ் (வயது 24) என்பவரும் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆனது. உயிரிழந்தவர்களில் 15 வயது சிறுமிகள் 2 பேரும் அடங்குவர்.

தொடர்ந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் இதன்மூலம் வாயு கசிவில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால், அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 11 பேர் எனவும், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 14 பேர் வெண்டிலேட்டர் உதவியோடும், 21 பேர் ஆக்சிஜன் உதவியோடும் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com