தமிழ்நாட்டில் முதல் முறையாக இயக்கப்படும் ‘அம்ரித் பாரத்’ ரெயில்


தமிழ்நாட்டில் முதல் முறையாக இயக்கப்படும் ‘அம்ரித் பாரத்’ ரெயில்
x
தினத்தந்தி 26 Sept 2025 9:28 AM IST (Updated: 26 Sept 2025 11:54 AM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநிலம் ஜோக்பானி வரை செல்லும் ‘அம்ரித் பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஈரோட்டில் தொடங்கப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு-ஜோக்பானி ரெயில் சேவை

ஈரோட்டில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள ஜோக்பானி என்ற பகுதிவரை புதிதாக ஈரோடு-ஜோக்பானி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் சென்னை ஐ.சி.எப். நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும். ஏற்கனவே வந்தே பாரத் ரெயில்கள் இங்கு தயாரிக்கப்பட்ட நிலையில் அம்ரித் பாரத் ரெயில்களும் இங்கு தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஜோக்பானி-ஈரோடு ரெயில் சேவை தொடக்க விழா கடந்த 15-ந் தேதி நடந்தது. பிரதமர் மோடி ஜோக்பானியில் நடந்த விழாவில் இந்த ரெயிலை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இது வாராந்திர ரெயிலாகும். ஈரோட்டில் இருந்து வியாழக்கிழமையும், மறுமார்க்கமாக ஜோக்பானியில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும் புறப்படும். அதன்படி நேற்று முதன் முறையாக ஈரோட்டில் இருந்து இந்த ரெயில் சேவை தொடங்கியது. இந்த ரெயில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஜோக்பானி ரெயில் நிலையத்தை சென்றடையும்.

இதுபோல் மறுமார்க்கமாக (வண்டி எண் 16602) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணிக்கு ஜோக்பானி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. புதன்கிழமை காலை 7.20 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து சேரும்.

சிறப்பு அம்சங்கள்

வந்தே பாரத் ரெயிலுக்கு இணையான வேகம், பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட, ‘அம்ரித் பாரத்' ரெயில் ‘புஸ் புல்' எனும் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலின் முன்னும் பின்னும் என இருபுறமும், என்ஜின்கள் இணைத்து இயக்கப்படுகிறது. மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் பயணம் செய்யும் வகையில் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 2-ம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடிய 8 பெட்டிகள், 2-ம் வகுப்பு பொது பயணிகளுக்காக 11 பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்காக 2 பெட்டிகள் உள்ளன. ரெயிலில் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரெயிலில் பயணிகள் தகவல் தொடர்பு அமைப்பு, புதுமையான வெளிப்புற தோற்றம், நவீன டிரைவர் அறை என பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

நேபாள எல்லை வரை

ஈரோட்டில் இருந்து புறப்படும் ரெயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நாயுடுபேட்டா, கூடூர், ஓங்கோல், விஜயவாடா, கம்மம், வாரங்கல், மஞ்சிரியால், பல்ஹர்ஷா, சந்திராப்பூர், சேவாகிராம், நாக்பூர், பெதுல், கோரமோங்கிரி, இடார்சி, பிபல்ஹர், கர்பரியா, கதர்வாரா, மாணிக்பூர், டபவுரா, ஜஸ்ரா, பிரயாக்ராஜ், சியோகி, விந்தியாச்சல், சுனார், பண்டிட் தீன்தயார் உபாத்யாயா, பக்சர், ரகுநாத்பூர், ஆரா, டாணாபூர், பாடலிபுத்ரா, சோன்பூர், ஹாஜிபூர், ஷாஜ்பூர், பட்டோரி, பரவுனி, பெகுசராய், ககாரியா, மான்சி, நவுகாச்சியா, கதிகார், பூர்ணியா, அராரியா கோர்ட், போர்ப்பிளஸ்கஞ்ச் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று ஜோக்பானி செல்கிறது.

ஜோக்பானி ரெயில் நிலையம் பீகார் மாநிலத்தில் நேபாள நாட்டின் எல்லையில் அமைந்துள்ள ரெயில் நிலையமாகும். இந்தியாவின் எல்லையில் உள்ள கடைசி ரெயில் நிலையம் ஜோக்பானி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் முதல் முறையாக இயக்கப்படும் ‘அம்ரித் பாரத்’ ரெயில்

ஈரோடு முதல் ஜோக்பானி வரை அம்ரித் பாரத் ரெயில் மொத்தம் 3 ஆயிரத்து 132 கி.மீ. பயணிக்கிறது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இயக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் இதுவாகும்.

ஈரோட்டில் ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்த சேலம் கோட்ட மேலாளர் பன்னாலால் கூறும்போது, ‘ஈரோட்டில் இருந்து 7 மாநிலங்களை கடந்து இந்த ரெயில் செல்கிறது. ஜோக்பானி ரெயில் நிலையம் இந்தியாவில் இருந்து நேபாள நாட்டுக்கு செல்லும் முக்கியமான நுழைவுவாயிலாக உள்ளது. இந்த ரெயில் மூலம் ஏழை எளிய மக்களுக்கும் விரைவான மற்றும் பாதுகாப்பான ரெயில் சேவை கிடைத்துள்ளது' என்றார்.

1 More update

Next Story