5,700 கி.மீ. இடைவிடாமல் பறந்து புதிய சாதனை படைத்த ‘அமூர் பால்கன்’ பறவை

2018-19-ல் இரண்டு அமூர் பால்கன் பறவைகள் 5,700 கி.மீ. தூரத்தை 128 மணி நேரத்தில் கடந்திருந்ததுதான் சாதனையாக இருந்தது.
அமூர் பால்கன் பறவை.
Published on: 

சென்னை,

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே 5,700 கி.மீ. தூரத்தை 101 மணி நேரம் இடைவிடாமல் பறந்து புதிய சாதனையை 'அமூர் பால்கன்' என்ற பறவை படைத்திருக்கிறது.

அமூர் பால்கன் பறவை

'அமூர் பால்கன்' வேட்டையாடும் பறவை. வட ஆசிய பகுதியான சைபீரியா மற்றும் வடக்கு சீனப் பகுதியில் இருந்து ஆண்டுதோறும் வலசையாக இந்த பறவை இந்தியா வழியாக ஆப்பிரிக்கா வரை சென்று திரும்புகிறது.

இதற்காக அந்த பறவை 22 ஆயிரம் கி.மீ. ஒவ்வொரு ஆண்டும் சிறகை விரித்து பறக்கிறது. இடையில் இந்தியாவில் நாகலாந்து, மணிப்பூரில் சற்று ஓய்வெடுத்து பயணிக்கும் இந்த பறவையை உள்ளூர் வாசிகள் வேட்டையாடி வந்தனர். லட்சக்கணக்கில் பறவைகள் வேட்டையாடப்படுவதை அறிந்த பறவை ஆர்வலர்கள் இதனை தடுக்க இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் உள்ளூர் மக்களுடன் இணைந்து விழிப்புணர்வை மேற்கொண்டதன் பலனாக அந்த பறவை வேட்டையாடப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

5,700 கி.மீ. பயணம்

மேலும் இந்த பறவையின் வலசைப் பயணம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து ஆய்வும் நடத்த தொடங்கினர். ஒவ்வொரு ஆண்டும் சில பறவைகள் அடையாளம் காணப்பட்டு அதன் மீது 'டிரான்ஸ்மிட்டர்' கருவி பொருத்தப்பட்டு, அதன் பயணங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் 3 அமூர் பால்கன் பறவைகளுக்கு இந்த கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

இந்த பறவைகளுக்கு அலாங், அஹூ, சியாங்க் என பெயரிடப்பட்டிருந்தன. இதில் 'அலாங்' என்ற பறவை மணிப்பூரில் இருந்து இந்திய நிலப்பரப்பை கடந்து அரபிக்கடலின் மேல் எங்கும் நிற்காமல், இரவும் பகலுமாக தொடர்ந்து 101 மணி நேரம் இடைவிடாமல் பறந்தது. சுமார் 5,700 கி.மீ. தூரத்தை கடந்து கிழக்கு ஆப்பிரிக்காவின் சோமாலியா கடற்கரையை மன உறுதி, தன்னம்பிக்கையுடன் இலக்கை அடைந்திருக்கிறது.

புதிய சாதனை

இதற்கு முன்னதாக 2018-19-ல் 2 அமூர் பால்கன் பறவைகள் இதேபோல், 5,700 கி.மீ. தூரத்தை 128 மணி நேரம் கடந்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த 'அலாங்' முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்த பறவை சரியான திட்டமிடலுடன் இந்தியாவில் தேவையான உணவுகளை சாப்பிட்டு அதன் மூலம் உற்பத்தியாகும் கொழுப்புகளை கொண்டே இடைவிடா பயணத்தை மேற்கொள்கிறது. மன உறுதி, சரியான திட்டமிடல், தன்னம்பிக்கை இருந்தால் இலக்கை அடையலாம் என்பதற்கு இந்த அமூர் பால்கன் பறவை சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

X