நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்து.. பைக்கில் சென்ற சிறுமி பலியான சோகம்


நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்து.. பைக்கில் சென்ற சிறுமி பலியான சோகம்
x
தினத்தந்தி 2 Sept 2025 10:32 PM IST (Updated: 3 Sept 2025 1:00 AM IST)
t-max-icont-min-icon

இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 30). இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் அனாமிகா (4) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாள். இதையடுத்து சேத்துப்பட்டு ரோட்டில் உள்ள ஒருவரிடம் குழந்தையை மந்திரிப்பதற்காக கார்த்தி மனைவியுடன் பைக்கில் அழைத்துச்சென்று கொண்டிருந்தார்.

அவர்கள் தச்சூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10 மேற்பட்ட தெரு நாய்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டு பைக் மீது பாய்ந்தன. இதனால் பைக் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கார்த்தி, தமிழ்ச்செல்வி, அனாமிகா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் 108 அவசர ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனாமிகா சிகிச்சை பலனின்றி இறந்தாள். கார்த்தி மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து ஆரணி நகர போலீசில் கார்த்தி புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெருநாய்கள் தொல்லையால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story