

சென்னை,
ஆசியாவிலேயே 2வது பெரிய மார்க்கெட்டான சென்னை கோயம்பேடு சந்தையில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான காய்கறி கடைகள், பழங்கள், பூ கடைகள் உள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு சந்தையில் நேற்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால், சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சி.எம்.டி.ஏ. நேற்று தெரிவித்திருந்தது.
இதுபற்றிய சி.எம்.டி.ஏ. வெளியிட்ட அறிவிப்பில், கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெறும். பொதுமக்கள் சந்தைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறை வியாபாரிகள் அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே காய்கறிகளை வாங்க அனுமதிக்கப்படும். நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாதவரம் பேருந்து நிலையத்தில் பூ மற்றும் பழ சந்தை இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் கூடுதலாக 4 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.