பிளாஸ்டிக் பொருட்களுடன் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு ஊட்டி, கொடைக்கானலில் தடை ஐகோர்ட்டு யோசனை

சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுடன் சுற்றுலா வரும் வாகனங்களை ஊட்டி, கொடைக்கானலுக்குள் மீண்டும் வர தடை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க ஆராய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களுடன் வரும் சுற்றுலா வாகனங்களுக்கு ஊட்டி, கொடைக்கானலில் தடை ஐகோர்ட்டு யோசனை
Published on

சென்னை,

தமிழக வனங்களைப் பாதுகாப்பது தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது வனத்துறை அதிகாரிகள், கோவை மாவட்ட கலெக்டர், நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர்.அப்போது அதிகாரிகள் கூறியதாவது:-

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

சோதனைச்சாவடி

ஒருமுறை பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை சுற்றுலா பயணிகள்தான் கொண்டுவருகின்றனர். ஊட்டியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிகள் விற்கப்படுவது இல்லை. இதனால், சுற்றுலா பயணிகளை கண்காணிக்கும் வகையில் கோவை மாவட்ட எல்லையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டுவரும் சுற்றுலா பயணிகளுக்கு பெருந்தொகை அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வாகனம் பறிமுதல்

அதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

திருப்பதியில் கீழே இருந்து மலைக்கு அதிக வேகத்தில் வரும் சுற்றுலா வாகனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பறிமுதல் செய்யப்படுகின்றன. அதேபோல ஊட்டி, கொடைக்கானலுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களுடன் வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை 6 மாதங்கள் அல்லது ஓராண்டுக்கு மீண்டும் அங்கு வர தடை விதிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆராய வேண்டும்.

நடவடிக்கை

இந்த ஊர்களில் பாலிதீன் பைகள், அபாயகரமான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை பிப்ரவரி 3-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com