

காவிரி சிக்கலில் கர்நாடகம் கையாண்டு வரும் அணுகுமுறையை நாம் கவனிக்க வேண்டும். நடுவர் மன்றத்திலும் சரி, சுப்ரீம் கோர்ட்டிலும் சரி, கர்நாடக அரசு தனது சார்பில் வாதாடுவதற்குத் திறமையான மூத்த வக்கீல்களை நியமித்திருந்தது. அவர்களோடு கர்நாடக மாநில முதல்-மந்திரி அவ்வப்போது கலந்து ஆலோசனை நடத்தி வழக்கைத் தீவிரமாக நடத்தினார்கள். வழக்கு விசாரணை நடந்தபோதெல்லாம் கர்நாடகாவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மட்டுமின்றி மூத்த அமைச்சர்களும் நீதிமன்றத்துக்கு நேரில் சென்று வழக்கை கவனித்தனர். அத்துடன் காவிரிப் பிரச்சினை தொடர்பாக கன்னட இனவெறி அமைப்புகள் விரும்பியபடியெல்லாம் போராட்டம் நடத்த அந்த மாநில அரசு ஆதரவாக இருந்தது. அங்குள்ள அரசியல் கட்சிகள் போராடவும் செய்தன.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை தமிழ்நாட்டுக்கு உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் காவிரிப் பிரச்சினையில் ஒன்றுபட்டு இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும், மேகதாதுவில் அணை கட்டாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.