தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
Published on

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம்

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

ஐகோர்ட்டு தீர்ப்பு

இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆகஸ்டு 3-ந் தேதி தீர்ப்பு அளித்தது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சட்டத்தை ரத்து செய்தது. மேலும், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமல் சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. இதுபோன்ற சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அந்த மேல்முறையீடு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com