வீடியோ காலில் பேசியபோது தகராறு.. காதலியை மிரட்ட விளையாட்டாக வாலிபர் செய்த செயல்.. அடுத்து நடந்த கொடூரம்


வீடியோ காலில் பேசியபோது தகராறு.. காதலியை மிரட்ட விளையாட்டாக வாலிபர் செய்த செயல்.. அடுத்து நடந்த கொடூரம்
x

வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது காதலியை மிரட்டுவதற்காக வாலிபர் செய்த செயலால் விபரீதம் நிகழ்ந்தது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். தூத்தூர் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஜெய்சங்கரன்(வயது 23) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஜெய்சங்கரன் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து விட்டு மேற்படிப்பில் சேர்வதற்காக காத்திருந்தார்.

ஜெய்சங்கரனும் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இனம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஜெய்சங்கரன் காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் ஜெய்சங்கரன் தனது காதலியிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் போர்வையால் தூக்குப்போட்டு தொங்கினார்.

அப்போது திடீரென போர்வை கழுத்தில் இறுக்கியதால் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஜெய்சங்கரனின் தாயார் ஓடி வந்து அறையின் கதவை திறக்க முயன்றார். ஆனால் முடியாததால் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அதற்குள் ஜெய்சங்கரன் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர் இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெய்சங்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story