எட்டயபுரம் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் குத்தி கொலை

எட்டயபுரம், அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் நள்ளிரவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எட்டயபுரம் அருகே விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் குத்தி கொலை
Published on

எட்டயபுரம்,

எட்டயபுரம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்த வேதமுத்து என்பவரின் மகன் வேல்முருகன். இவர் கடந்த 2018-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராணுவத்திலிருந்து ஒரு மாத விடுப்பில் தனது சொந்த ஊரான வெம்பூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு ராணுவ வீரர் வேல்முருகன் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த போது மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ராணுவ வீரரை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் சடலமாக கிடந்த ராணுவ வீரர் வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விளாத்திகுளம் (பொறுப்பு) டி.எஸ்.பி லோகேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராணுவ வீரர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக வெம்பூர் கிராமம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் சொந்த வீட்டிலேயே குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வெம்பூர் கிராமத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com