பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சியா? - மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

காடுகளைப் பாதுகாத்து வந்தவர்களையே அவர்களது சொந்த நிலத்திலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
செல்வபெருந்தகை
Published on

சென்னை,

பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செல்வபெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மலைவாழ் பழங்குடியின மக்கள்

காடுகளையும், மலைகளையும் தங்களது வாழ்விடமாகவும், வாழ்வாதாரமாகவும் பல தலைமுறைகளாகப் பாதுகாத்து வரும் மலைவாழ் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது.

வன நிலங்களை வனச்சாரா பயன்பாடுகளுக்கு மாற்றும்போது, அப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் கருத்தையும், கிராம சபையின் உரிமையையும் புறக்கணிக்கலாம் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு, பழங்குடியின மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டமும், வன உரிமைச் சட்டமும் வழங்கியுள்ள பாதுகாப்புகளுக்கு எதிரானதாகும்.

'எங்கள் நிலம்; எங்கள் காடு; எங்கள் வாழ்வாதாரம்' என்ற பழங்குடியின மக்களின் உரிமையை அதிகாரத்தின் பெயரால் பறிக்க மத்திய அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. காடுகளைப் பாதுகாத்து வந்தவர்களையே அவர்களது சொந்த நிலத்திலிருந்து அந்நியப்படுத்தும் முயற்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கிராம சபையின் பங்களிப்பை வலுவிழக்கச் செய்வது என்பது வெறும் நிர்வாக மாற்றம் அல்ல அது பழங்குடியின மக்களின் ஜனநாயக உரிமையையும், வாழ்வுரிமையையும் கேள்விக்குள்ளாக்கும் ஆபத்தான நடவடிக்கை. தொழில் நிறுவனங்களுக்கும், பெருநிறுவனங்களுக்கும் வன நிலங்களைத் திறந்துவிடுவதற்காக பழங்குடியின மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசின் கடமையே

மலைவாழ் மக்களின் நிலம், காடு, நீர் மற்றும் பாரம்பரிய வாழ்வாதாரத்தின் மீது அவர்களுக்குள்ள உரிமையை எந்த அதிகாரமும் பறிக்க முடியாது. பழங்குடியின மக்களின் ஒப்புதல் மற்றும் கிராம சபைகளின் அதிகாரத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையே தவிர, அதனை நீர்த்துப்போகச் செய்வது அல்ல.

எனவே, பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கிராம சபைகளின் அதிகாரத்தை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையும், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைக்கும் எந்த நடவடிக்கையையும் உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com