ஆட்டோவில் சவாரி வந்த பெண் வன காவலரை கடத்த முயற்சி; டிரைவருக்கு வலைவீச்சு

பெரியகுளத்தில் ஆட்டோவில் சவாரி வந்த பெண் வன காவலரை கடத்த முயன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆட்டோவில் சவாரி வந்த பெண் வன காவலரை கடத்த முயற்சி; டிரைவருக்கு வலைவீச்சு
Published on

பெரியகுளத்தில் ஆட்டோவில் சவாரி வந்த பெண் வன காவலரை கடத்த முயன்ற டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் வன காவலர்

தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா கத்தரிப்பட்டியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 40). இவர் தீர்த்தமலை வனச்சரகத்தில் வன காவலராக பணியாற்றி வருகிறார்.

தேனி மாவட்டம் வைகை அணை பகுதியில் உள்ள வனவியல் பயிற்சி கல்லூரியில் வன காவலர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்பதற்காக மல்லிகா அரூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு பெரியகுளத்துக்கு வந்தார். அப்போது அவர் வந்த பஸ், பெரியகுளம் பஸ் நிலையத்துக்கு செல்லாமல், தேனி சாலையில் மூன்றாந்தல் பஸ் நிறுத்தத்தில் நின்றது. இதனால் அவர் அங்கு இறங்கினார்.

ஆட்டோவில் சவாரி

அவர் வந்தது நள்ளிரவு 3 மணி என்பதால் அங்கு யாருமில்லை. சிறிது நேரத்தில் மல்லிகாவை போன்று, பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு வன காவலர் சாமிவேல் என்பவர் வந்தார். இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து பெரியகுளம் பஸ் நிலையத்துக்கு சென்று, காலை பொழுதில் பயிற்சி முகாமிற்கு செல்ல முடிவு செய்தனர்.

அதற்கு முன்னதாக பெரியகுளம் பஸ் நிலையத்துக்கு செல்ல ஆட்டோ எதுவும் வருகிறதா என்று 2 பேரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போது அங்கு ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோவை நிறுத்தி, பெரியகுளம் பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறி 2 பேரும் சவாரி சென்றனர்.

மூன்றாந்தல் பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் பெரியகுளம் பஸ் நிலையம் உள்ளது. ஆனால் வன காவலர்களை சவாரி ஏற்றிய ஆட்டோ, பெரியகுளம் பஸ் நிலையத்துக்கு செல்லாமல் தாமரைகுளம், டி.கல்லுப்பட்டி, லட்சுமிபுரம் வழியாக 8 கிலோ மீட்டர் கடந்து தேனி கோர்ட்டு அருகில் உள்ள வரட்டாறு பகுதிக்கு சென்றது.

கீழே குதித்தார்

ஒருகட்டத்தில் ஆட்டோ வெகுதூரத்திற்கு சென்றதால் வன காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆட்டோ டிரைவரிடம் சாமிவேல் கேட்டார். மேலும் ஆட்டோவை நிறுத்த கூறினார். ஆட்டோவை டிரைவர் நிறுத்தினார். முதலில் சாமிவேல் கீழே இறங்கினார். மல்லிகா ஆட்டோவில் இருந்தார்.

ஆனால் மல்லிகா இறங்குவதற்கு முன்பாக ஆட்டோவை டிரைவர் வேகமாக ஓட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த மல்லிகா கூச்சல் போட்டார். இருப்பினும் ஆட்டோவை நிறுத்தாமல் டிரைவர் சென்றார். உடனே சுதாரித்துக்கொண்ட மல்லிகா ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பினார். அதன்பிறகு ஆட்டோ நிற்காமல் சென்றுவிட்டது.

கடத்த முயற்சி

ஆட்டோவில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்த மல்லிகாவை சாமிவேல் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து மல்லிகா, தேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஆட்டோ டிரைவர் தன்னை கடத்தி செல்ல முயன்றதாக தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆட்டோவில் சவாரி வந்த பெண் வன காவலரை டிரைவர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com