வேறொரு டாக்டரின் பெயரில் சிகிச்சை அளித்த என்ஜினீயர்

டெல்லி ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வரும் வேறொரு டாக்டரின் பெயரில் போலியாக பதிவு செய்து மருத்துவம் பார்த்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
வேறொரு டாக்டரின் பெயரில் சிகிச்சை அளித்த என்ஜினீயர்
Published on

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் செம்பியன் (வயது 35). இவர் மருத்துவம் படித்து முடித்து விட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் தனது உரிமத்தை புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டார். பலமுறை முயற்சித்தும் புதுப்பிக்க முடியாததால், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து விசாரித்தார். அப்போது, இவரது பெயரில் வேறொருவர் உரிமத்தை புதுப்பித்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செம்பியன் இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்படி இந்த புகார் அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில் அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது டாக்டர் செம்பியன் பெயரில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு வாலிபர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தெரியவந்ததாவது:-

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கைதான செம்பியன் (36), கடந்த 2019-ம் ஆண்டு ஏரோனாடிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்ட செம்பியன் குறுக்கு வழியில் மருத்துவராக திட்டமிட்டு இந்திய மெடிக்கல் கவுன்சில் இணையதளத்துக்கு சென்று பதிவு செய்யப்பட்டுள்ள டாக்டர்களின் பட்டியலை எடுத்துள்ளார்.

அதில் அவரது பெயரை கொண்ட ஒத்த வயதுடைய தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த புகார் தாரரான செம்பியன் தகவலை திரட்டியுள்ளார். அதில் அவரது புகைப்படம் மற்றும் முகவரியை நீக்கிவிட்டு இவரது புகைப்படம் மற்றும் முகவரியை மாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் போலி டாக்டர் செம்பியன் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தரமணியில் மருந்தகத்துடன் கூடிய ஆஸ்பத்திரியை நடத்தி வந்துள்ளார். சிகிச்சை தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டபோதெல்லாம் யூடியூப் உதவியுடன் தகவல்களை திரட்டி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மோசடிக்கு உடந்தையாக வேறு யாரேனும் உள்ளார்களா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

எண்ணூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் சுதர்சன் குமார் (55). இவர் கடந்த 30 வருடங்களாக அப்பகுதியில் கிரிஜா கிளினிக் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை குழுவினர் ரகசிய புகாரின் அடிப்படையில், இணை இயக்குனர் டாக்டர் விசுவநாதன் தலைமையில் அதிகாரிகள் திடீரென கிளினிக்குக்குள் நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுதர்சன் யோகா பட்டப்படிப்பு முடித்த சான்றிதழை வைத்து கொண்டு எம்.பி.பி.எஸ். டாக்டர் போல் ஊசி, மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி டாக்டர் சுதர்சனை எண்ணூர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com