தப்பி ஓடிய போக்சோ கைதி பிடிபட்டார்

மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றபோது தப்பி ஓடிய போக்சோ கைதி பிடிபட்டார். அடையாளம் தெரியாமல் இருக்க மொட்டை அடித்தார்.
தப்பி ஓடிய போக்சோ கைதி பிடிபட்டார்
Published on

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா (வயது 45). சென்னை கோயம்பேட்டில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசாரால் செந்தில் ராஜா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு கழிவறைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற செந்தில்ராஜா, நைசாக தப்பிச் சென்று விட்டார். இது தொடர்பாக பெண் போலீஸ் லாவண்யா மற்றும் கோயம்பேடு போலீஸ் சுரேஷ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையில் தனிப்படைகள் அமைத்து தப்பி ஓடிய போக்சோ கைதியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் வடபழனி பகுதியில் மொட்டை அடித்தபடி பூங்காவில் ஒருவர் மயங்கி கிடப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போக்சோ கைதி செந்தில்ராஜா என்பது தெரியவந்தது. மயக்க நிலையில் இருந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய செந்தில்ராஜா, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ டிரைவரிடம் செல்போனை வாங்கி தனது நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு செலவுக்கு பணத்தை வாங்கினார். அந்த பணத்தை கொண்டு திருச்செந்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தலைமறைவாக இருந்தார்.

போலீசார் தன்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க தலையை மொட்டை அடித்துக் கொண்டார். வாகனத்திலேயே ஒவ்வொரு பகுதியாக சுற்றி வந்துள்ளார். சரியாக சாப்பிடாமல் பட்டினியுடன் இருந்ததாக தெரிகிறது.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு அந்த பூங்காவில் மயங்கி கிடந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

அவரது உடல் நலம் தேறி வந்த பிறகு செந்தில்ராஜாவிடம் தொடர்ந்து விசாரணை செய்யவும், கைதான செந்தில்ராஜா மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளதால் அவர்களிடம் ஒப்படைக்கவும் கோயம்பேடு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com