தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக்கொள்ளலாம்; தமிழக மதுபானங்களுக்கே பொருந்தும் - ஐகோர்ட்டில் அரசு தரப்பு பதில்

பிற மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கொண்டு வருவது சட்டப்படி குற்றம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக்கொள்ளலாம்; தமிழக மதுபானங்களுக்கே பொருந்தும் - ஐகோர்ட்டில் அரசு தரப்பு பதில்
Published on

சென்னை,

ஆந்திராவில் இந்து 32 லிட்டர் மதுபானத்தை விற்பனைக்காக கொண்டு வந்ததாக கூறி தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீஞ்சூரை சேர்ந்த தமிழரசன், ராஜேஷ் குமார் ஆகிய இரண்டு பேர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

தமிழக அரசின் அரசாணைப்படி 4.5 லிட்டர் அளவிலான மதுபானத்தை தனி நபர் பயன்பாட்டுக்காக வைத்திருக்கலாம் என்பதால் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை அவர்கள் தங்கள் மனுவில் முன்வைத்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, தனிப்பட்ட பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் என்ற அரசாணை தமிழ்நாட்டில் விற்கப்படும் மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும். புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படக்கூடிய மதுபானங்களுக்கு பொருந்தாது என்று வாதிட்டார்.

மேலும் புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு 4.5 லிட்டர் வரை வந்து மதுபானம் கொண்டு வரலாம் என ஐகோர்ட்டு அனுமதி வழங்கியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், தனிநபர் பயன்பாட்டுக்காக 4.5 லிட்டர் மதுபானம் வைத்துக் கொள்ளலாம் என்ற அரசாணை தமிழகத்தில் சட்டப்பூர்வமாக விற்கப்படக்கூடிய மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறி தமிழரசன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோரின் மனுக்களை நீதிபதி நிர்மல் குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் மூலமாக, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்களை கொண்டு வருவது சட்டப்படி குற்றம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com