தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை பார்வையிட சென்னை வந்த 10 நாடுகளை சேர்ந்த சர்வதேச குழு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதிக்குட்பட்ட என்.கே.டி. நேஷனல் பெண்கள் உயர்நிலை பள்ளிக்கு அவர்கள் அனைவரும் சென்றனர்.
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை பார்வையிட சென்னை வந்த 10 நாடுகளை சேர்ந்த சர்வதேச குழு
Published on

சென்னை

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15-ந்தேதி அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்ட தேர்தலாக நடத்தி முடிக்கப்படும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டன. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் வெயிலிலும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களை சந்தித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. தேர்தல் பிரசாரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிடுகின்றன. இவை தவிர, நாம் தமிழர் மற்றும் த.வெ.க. ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தலை தனித்து எதிர்கொள்கின்றன. இதனால், தமிழக சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை பார்வையிட 10 நாடுகளை சேர்ந்த 20 பேர் கொண்ட சர்வதேச குழு ஒன்று சென்னைக்கு வருகை தந்துள்ளது.

அவர்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் 3 பிரதிநிதிகளும் சேர்ந்து, நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்தனர். இதன்படி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதிக்குட்பட்ட என்.கே.டி. நேஷனல் பெண்கள் உயர்நிலை பள்ளிக்கு அவர்கள் அனைவரும் சென்றனர். அப்போது, கோடை வெயிலை தணிக்கும் வகையில், அவர்களுக்கு இளநீர் கொடுக்கப்பட்டது.

என்னுடைய வாக்கு என்னுடைய உரிமை என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பற்றி அவர்கள் ஆய்வு செய்தனர். இதில் உள்ள நடைமுறைகள், பின்பற்றப்படும் விதிகள் ஆகியவற்றில் கிடைக்கும் அனுபவங்களை பெற்று கொண்டு தங்களுடைய சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com