72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்; மயிலாடுதுறையில் ருசிகரம்

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்; மயிலாடுதுறையில் ருசிகரம்
Published on

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(வயது 72). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் இவர் தற்போது மனைவியுடன் வசித்து வருகிறார்.

ஐ.டி.ஐ. படித்த இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்தார். அப்போது எம்.காம்., எம்.பி.ஏ., படிப்பை படித்து முடித்துள்ளார். பணி ஓய்வு பெற்று 10 வருடங்கள் முடிவடைந்த நிலையில் படிப்பின் மீது ஆர்வம் குறையாத செல்வமணி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

சக மாணவர்களைப்போல் தோளில் புத்தகப் பையை சுமந்து கொண்டு கையில் மதிய உணவை எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு உரிய நேரத்தில் வந்து செல்கிறார். உடல்நிலை சரியில்லாத தனது மனைவிக்கு தேவையான அனைத்தையும் செய்து வைத்து விட்டு காலை 9 மணிக்கு சரியாக கல்லூரிக்கு வரும் அவர் மாலை 5 மணி அளவில் கல்லூரி முடித்துவிட்டு மீண்டும் தனது ஊரான வடலூர் பகுதிக்கு செல்கின்றார்.

இவருடன் பழகும் மற்ற மாணவர்கள் இவரை தாத்தா என்று அன்புடன் அழைக்கின்றனர். தன்னை சக மாணவர்கள் இவ்வாறு அழைக்கிறார்களே என்று இவர் சிறிதளவும் கோபம் கொள்வதோ, வருத்தப்படுவதோ கிடையாது. மாறாக தன்னையும் அவர்களில் ஒருவனாக(இளைஞனாக) கருதிக்கொண்டு அவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக அளவளாவி வருகிறார். இதனால் கல்லூரி பேராசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் இவரை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com