புதர் சூழ்ந்த பழைய பள்ளி கட்டிடம்

நெகமத்தில் புதர் சூழ்ந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதர் சூழ்ந்த பழைய பள்ளி கட்டிடம்
Published on

நெகமம்

நெகமத்தில் புதர் சூழ்ந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அரசு பள்ளி

பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டப்பட்டது. அப்போதைய மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப அந்த பள்ளியில் கட்டிடங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

அதன்பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்தால், அந்த கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. இதனால் நாகர் மைதானம் அருகே புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, அங்கு பள்ளி மாற்றப்பட்டது.

பழைய கட்டிடம்

ஆனால் பழைய பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்படவில்லை. மேலும் வேறு பயன்பாட்டுக்கும் வழங்கப்படவில்லை. இது தவிர உரிய முறையில் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை.

இதன் காரணமாக அந்த கட்டிடங்கள் பழுதடைந்தது. அங்கு புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. மேலும் சுவர்களில் செடிகள் முளைத்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. சில நேரங்களில் அங்கு சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன.

விஷ ஜந்துகள்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. புதர் செடிகளால் சூழப்பட்டு, கட்டிடங்கள் இருப்பது கூட வெளியே தெரியாத நிலை காணப்படுகிறது. அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் பதுங்கி உள்ளன.

அவை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் படையெடுப்பதால், வெளியே வரவே அச்சமாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், கட்டிடத்தை இடிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது, உத்தரவு வந்ததும் இடித்து அகற்றப்படும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. எனவே விரைவாக கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com