

சேலம்,
சேலம் அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பூர்ணம் (வயது 65). இவர் கடந்த 7-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு திட்டக்குடியில் உள்ள தனது மகள் வீட் டிற்கு சென்றார்.
நேற்று காலை அவருடைய மகன் கோவிந்தராஜ் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த தோடு, மூக்குத்தி, 3 பவுன் சங்கிலி என மொத்தம் 5 பவுன், ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போனது தெரிந்தது.
இது குறித்து கோவிந்தராஜ், வீராணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.