வரலாற்றில் இதுவரை இல்லாத விலை... தமிழக அரசு மின்சாரம் கொள்முதல் செய்தது எப்படி?

ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு விலை வேண்டும் என்பதையும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
வரலாற்றில் இதுவரை இல்லாத விலை... தமிழக அரசு மின்சாரம் கொள்முதல் செய்தது எப்படி?
Published on: 

சென்னை,

ஒரு மாநிலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கும்போது, வழக்கமான மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் மின்சாரம் போதுமானதாக இல்லாவிட்டால், மாநில மின்வாரியங்கள் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்கின்றன. இதற்காக மின்சாரம் வழங்க தயாராக இருக்கும் நிறுவனங்களிடம் விலை கோரி ஏலம் நடத்தி ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

மின்னணு ஏலம்

மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திறமையான மின்சார விலையைக் கண்டறிதல் (டீப்) இணையதளம், இந்த கொள்முதலுக்கான மின்னணு ஏலத்தளமாகும். தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகமும் இந்தத் தளத்தின் மூலம் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஏலங்களை நடத்துகிறது. மாநிலத்தில் எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும், வழக்கமான மின்உற்பத்தி மற்றும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மூலம் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை கணக்கிட்டு, கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்தின் அளவை மின்வாரியம் தீர்மானிக்கிறது.

அதன்பிறகு, எவ்வளவு மின்சாரம் தேவை, எந்தக்காலத்துக்கு வேண்டும், எந்த நேரத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களுடன் இணையதளத்தில் ஏல அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களால் வழங்க முடியும் மின்சாரத்தின் அளவையும், ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு விலை வேண்டும் என்பதையும் தெரிவிக்கின்றன.

4,500 மெகாவாட்

ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்கள் தெரிவித்த விலைகள் ஒப்பிடப்படுகின்றன. குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வரும் நிறுவனங்களுக்கு ஏல விதிகளின்படி முன்னுரிமை அளித்து ஒப்பந்தம் இறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நடப்பு மாதத்தில் (அதாவது அக்டோபர்) மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் நேற்று முன்தினம் முதல் 31-ந்தேதி வரை மின்சாரம் வாங்குவதற்கான ஏலத்தை நடத்தியது. இதற்காக மொத் தம் சுமார் 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது.

மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரையிலான தேவைக்காக ஒரு யூனிட்டுக்கு ரூ.33.37 முதல் ரூ.37 வரையிலும், நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணி வரையிலான தேவைக்காக ரூ.31.99 முதல் ரூ.34.49 வரையிலும் விலைகள் தெரிவிக்கப்பட்டன. மாலை நேரத்துக்கான ஏலத்தில் 181 மெகாவாட் மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.35 என்ற விலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை, தமிழகத்தில் இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட மின்சாரத்திலேயே அதிகமானது என்று கூறப்படுகிறது.

ஆந்திராவில் குறைவு

மின்சாரம் வாங்குவதற்கான விலையில் தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் இடையே பெரிய வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத்திய மின்துறை அமைச்சகத்தின் 'டீப்' இணையதள ஏலத்தில், அக் டோபர் மாதத் தேவைக்காக ஆந்திரபிரதேச மின் ஒருங்கிணைப்புக்குழு 150 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.16 முதல் ரூ.20 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.35 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆந்திரபிரதேசம் அக்டோபர் மாதத் தேவைக்கான ஏலத்தை செப்டம்பர் 9-ந்தேதியே இறுதி செய்துவிட்டது. தமிழகமோ அக்டோபர் 12-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான தேவைக்கான ஏலத்தை அதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் கோரியது என்று அதிகாரிகள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com