

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தில் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் 1-ந் தேதி அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டார். அதன் பின்னர், 48 நாட்கள், சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் பல வண்ண பட்டாடைகளில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுமார் 1 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வரதராஜ பெருமாள் கோவிலுக்கு படையெடுத்து வந்ததால் காஞ்சீபுரமே விழாக்கோலம் பூண்டது.
நேற்று முன்தினம் பக்தர்கள் தரிசனம் நிறைவடைந்ததையொட்டி, அன்று இரவே கோவில் கிழக்கு ராஜ கோபுரம் மூடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்படும் 48-ம் நாளான நேற்று வி.ஐ.பி. பக்தர்கள் உள்பட எவரும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை பட்டாச்சாரியார்கள் அத்திவரதரக்கு காவி மற்றும் ரோஜா நிற பட்டாடை அணிவித்து, பூஜை செய்தனர். இதையடுத்து ஆகம விதிப்படி, விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்று அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜைகள் தொடங்கியது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அத்திவரதருக்கு 60 கிலோ மூலிகை தைலம் பூசப்பட்டது. சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட்டது. இந்த 60 கிலோ மூலிகையில் சந்தானாதி தைலம் கலந்துள்ளது. இதில், குங்குமப்பூ, வெட்டிவேர், நொச்சிவேர், சாம்பிராணி, ஏலம், சாதிக்காய், லவங்கம் உள்ளிட்டவை கலந்து இருந்தன.