

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சி மண்ணச்சநல்லூரில் திமுகவினர் வினியோகித்த ரூ.8,000 போலிக் கூப்பனை தமக்கு ஏன் வழங்கவில்லை? என்று கூறி வாக்குவாதம் செய்த சிந்துஜா என்ற பட்டியலின இளம்பெண்ணை திமுகவினர் ஆபாசமான வார்த்தைகளில் திட்டி, தாக்கியதால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிந்துஜாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வி அடையப்போவது உறுதி என்பதை அறிந்து கொண்ட திமுக, மோசடி செய்தாவது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாக எல்லா ஊர்களிலும் போலிக் கூப்பன்களை வழங்கி கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி வருகிறது. அது பொய் என்பதை உணராமல் போலி கூப்பனைக் கேட்டதற்காகத்தான் திருச்சியில் பட்டியலின பெண்ணை திட்டியும், தாக்கியும் தற்கொலை செய்து கொள்ள வைத்திருக்கிறது திமுக. கொடிய பாம்பை விட திமுக மிகவும் தீமையானது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.
திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியின் பயன் என்னவென்றால், ரூ.8,000 கூப்பனுக்காக அலையும் அளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் சீரழித்திருப்பதுதான். திமுக ஆட்சிக்கு வந்தால் கூப்பன் வழங்கப்படும் என்பது முதல் மோசடி என்றால், துண்டுச்சீட்டை அச்சிட்டுக் கொடுத்து, அதைக் கடைகளில் கொடுத்து பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறி மக்களை ஏமாற்றுவது இன்னொரு மோசடி ஆகும். இந்த மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் திமுகவின் இந்த மோசடிக்கு துணை நிற்பதும் கண்டிக்கத்தக்கவை.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சாதனை என்று கூறி வாக்குக் கேட்பதற்கு திமுகவுக்கு எதுவுமே இல்லை. அதனால்தான் கூப்பன் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் 420 வேலைகளில் திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது. இதற்கெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். போலி கூப்பன்களை வழங்கி மக்களை ஏமாற்றும் திமுகவின் மோசடி பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.