

சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட பாடகி எஸ். ஜானகி அம்மையார் அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஐந்து தலைமுறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை பாடிய அவர், இசை ரசிகர்களின் செவிகள் வழியாக இதயங்களில் நுழைந்தவர். கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசை அமைப்புகளிலும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்தும், தனித்தும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எரிமலைகளையும் இளக வைக்கக் கூடியவை. காந்தக் குரலுக்கு எடுத்துக்காட்டு என்றால் எஸ். ஜானகி அமமையார் தான்.
4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் அவர். இவை அனைத்துக்கும் மேலாக இசை ரசிகர்களின் அன்பையும், ஆரவாரத்தையும் தான் பெரிய விருதாக மதித்தவர். அவரது மறைவு இசை ரசிகர்கள் அனைவருக்கும் பேரிழப்பு.
இசையரசி எஸ்.ஜானகி அம்மையார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.