நாகூர் தர்கா சீரமைப்புக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நாகூர் தர்காவின் 469-ம் கந்தூரி வரும் நவம்பர் 21-ந்தேதி தொடங்க உள்ளது.
நாகூர் தர்கா சீரமைப்புக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த தர்காக்களில் ஒன்றான நாகூர் தர்காவின் மண்டபங்களை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்து வருகிறது. இது சரியல்ல.

நாகூர் தர்காவின் மண்டபங்கள் 350 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை. அவற்றை சீரமைக்க ரூ.73 கோடி செலவாகும் என்று பல ஆண்டுகளுக்கு முன் மதிப்பீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாகூர் தர்காவின் பரம்பரை அறங்காவலர் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், 2022-23-ம் ஆண்டில் ரூ.2 கோடி ஒதுக்கியது தவிர வேறு எந்த உதவியும் செய்யவில்லை.

நாகூர் தர்காவை சீரமைக்க தேவைப்படும் நிதியுடன் ஒப்பிடும்போது அரசு ஒதுக்கிய நிதி யானைப்பசிக்கு சோளப்பொறியை போன்றதாகும். தர்கா சீரமைப்புக்கான முந்தைய மதிப்பீடான ரூ.73 கோடி இப்போது மேலும் அதிகரித்து விட்ட நிலையில், நாகூர் தர்கா சீரமைப்புக்காக தமிழக அரசு குறைந்தது ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நாகூர் தர்காவின் 469-ம் கந்தூரி வரும் நவம்பர் 21-ந்தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அதனை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயங்களை வெளியிடவும், விழாவுக்கு வந்து செல்வோரின் வசதிக்காக நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து நாகூருக்கு சிறப்பு தொடர் வண்டிகளை இயக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com