410 பேருக்கு உடனே ஆசிரியர் பணி வழங்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படாததற்கு அரசின் தடுமாற்றம் தான் காரணம் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
410 பேருக்கு உடனே  ஆசிரியர் பணி வழங்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்கு முன் 2013-ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று, ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பையும் நிறைவு செய்த 410 பேருக்கு இன்று வரை ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கூட அதை முந்தைய திமுக அரசும், இப்போதைய தவெக அரசும் செயல்படுத்த மறுப்பது பெரும் அநீதி ஆகும்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது 2012-ஆம் ஆண்டில் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அதன் பின் வந்த அரசுகள் இந்த விவகாரத்தில் தங்களில் நிலைப்பாட்டையும், கொள்கைகளையும் முன்னுக்குப் பின் முரணாக மாற்றியது தான் 410 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதற்கு காரணம் ஆகும்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. அதன் பின் 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 410 பேர் தவிர மீதமுள்ள அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்கப்பட்டுவிட்டது. 410 பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படாததற்கு அரசின் தடுமாற்றம் தான் காரணம் ஆகும்.

2012 ஆம் ஆண்டு தகுதித் தேர்வு வென்றவர்கள் மற்றும் 2013-ஆம் ஆண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒரு பிரிவினருக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வேலை வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தகுதித் தேர்வு தேர்ச்சியுடன் வெயிட்டேஜ் மதிப்பெண்ணும் கட்டாயமாக்கப்பட்டது. அதனால் தான் தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன்பின் 2018-ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149-இன் படி தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், போட்டித் தேர்வில் வென்றால் தான் ஆசிரியர் பணி என அறிவிக்கப்பட்டது. இதனால் 410 பேரின் ஆசிரியர் பணி காணல் நீராகி விட்டது.

ஒரு பணிக்கு இரு தேர்வுகள் நடத்தப்படுவதை எதிர்த்து 410 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்து 2024-ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி வழங்க ஆணையிட்டது. ஆனால், அதை செயல்படுத்த மறுத்துவிட்ட திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் லோக் அதாலத் வாயிலாக தீர்வு காண ஆணையிட்டது. அதன்படி கடந்த ஜூலை 14-ஆம் நாள் நடைபெற்ற சமரசத் தீர்வு விசாரணையில் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிராகரித்து விட்டு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்தார். இது பெரும் அநீதியாகும்.

உச்சநீதிமன்றமே லோக் அதாலத் மூலம் இந்த சிக்கலை கருணை அடிப்படையில் தீர்க்க ஆணையிட்ட பிறகு மீண்டும் மேல்முறையீடு செய்யப் போவதாக அரசு வழக்கறிஞர் கூறுவது பெரும் சமூக அநீதியாகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் ஆசிரியர் பணி என்ற அடிப்படையில் தான் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடததப்பட்டன. அவ்வாறு இருக்கும் போது அவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதையும், மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கூறுவதை ஏற்க முடியாது.

எனவே, சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஆணையிட்டவாறு 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்று இதுவரை ஆசிரியர் பணி கிடைக்காத 410 பேருக்கும் உடனடியாக ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும். 2018-ஆம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்று பெற்றவர்களை பெருமளவில் பாதிக்கும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்யவும் அரசு முன்வர வேண்டும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com