18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் புகைப் பிடிக்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - பிரதமருக்கு அன்புமணி கடிதம்

புகைப் பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் புகைப் பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி மற்றும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா ஆகியோருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள இளைஞர்களின் நலன்களை பாதுகாக்கவும், புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகளை பின்பற்றி இந்தியாவிலும் 2009-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அல்லது அதற்குப்பிறகு பிறந்தவர்கள், அதாவது இப்போது 18 வயதுக்கும் குறைவாக உள்ளவர்கள் புகைப்பிடிப்பதற்கும், அவர்களுக்கு சிகரெட் மற்றும் இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கும் சட்டத்தை இயற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் 26.70 கோடி பேர், அதாவது இந்திய மக்கள் தொகையில் 5-ல் ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். நேரடியாக புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 13.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சிகரெட் புகையை சுவாசிப்பவர்களையும் சேர்த்தால் ஆண்டுக்கு 23 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 40 முதல் 50 சதவீதம் புற்றுநோய் பாதிப்புக்கு புகையிலைப் பயன்பாடுதான் காரணமாக உள்ளது.

வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் என 12 வகையான புற்றுநோய்கள், ஆஸ்துமா, நாள் பட்ட நுரையீரல் அடைப்பு நோய், பக்கவாதம், இதய நோய்கள், மலட்டுத்தன்மை, நீரிழிவு நோய், கண்பார்வை பாதிப்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதுமே சிகரெட் புகைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன. இதற்கான முதல் முயற்சியை நியூசிலாந்து நாடு தான் தொடங்கியது. 2009 மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்கள் புகைப் பிடிப்பதற்கு தடை விதிக்கும் சட்டத்தை 2022-ம் ஆண்டில் நியூசிலாந்து நிறைவேற்றியது. அந்த சட்டம் 2024-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், 2023-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், நியூசிலாந்து நாட்டின் சட்டத்தால் ஈர்க்கப்பட்ட உலகின் பல நாடுகள் அதே போன்ற சட்டத்தை நிறைவேற்றி வருகின்றன.

இந்தியாவில், இன்றைய நிலையில், 2009-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்கள் புகையிலை சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட அனைத்து வகையான சிகரெட்டுகளையும் புகைப்பதற்கு தடை விதிக்கும் சட்டத்தை விரைவாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com