பழங்கால கற்சிலை கண்டெடுப்பு

குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தில் பழங்கால கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலையை தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை சிலைகள் காப்பகத்துக்கு கொண்டுசெல்வது குறித்து தொல்லியல்துறை அதிகாரி ஆய்வு செய்தார்
பழங்கால கற்சிலை கண்டெடுப்பு
Published on

குத்தாலம்:

கற்சிலை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த கோனேரிராஜபுரத்தில் வித்தியாசமான அம்பாள் கற்சிலை ஒன்று கிடைத்துள்ளதாக குத்தாலம் தாசில்தார் சித்ராவிற்கு அப்பகுதி கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் சிலையை கைப்பற்றி குத்தாலம் தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்றனர். இதனை தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தொல்லியல் அலுவலர் வசந்தகுமார், குத்தாலம் தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தவ்வை சிலை

3 அடி உயரம், 2 அடி அகலம் மற்றும் 1.5 அடி தடிமனில் சுமார் 100 கிலோ எடையில் அமைந்த அச்சிலை தவ்வையின் தெய்வச் சிலை என்றும், காக்கை கொடியுடன் அமைந்த தவ்வை சிலையின் இருபுறங்களிலும் மாந்தன், மாந்தை என்ற பிள்ளைகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 10-ஆம் நூற்றாண்டை சார்ந்தது என்பதால் அதனை தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் தொல்பொருள் பாதுகாப்பு பிரிவில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆதிகாலம் தொடங்கி 13-ம் நூற்றாண்டு வரை தமிழர்கள் கொற்றவைக்கு அடுத்து அதிகம் வழிபட்ட தெய்வமாக தவ்வை இருந்துள்ளது. வடவர்களின் வரவுக்கு பிறகு தவ்வை என்கிற மூத்ததேவி காலப்போக்கில் மூதேவி என குறிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்டது. மூதேவி-ஸ்ரீதேவி குறித்து திருவள்ளுவர் தனது 167-வது குறளில் குறிப்பிட்டுள்ளார். இந்த சிலை கண்டெடுப்பு குறித்து தகவல் அறிந்த இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் தமிழர்களின் பெண்தெய்வம் மெல்ல மெல்ல துடைத்தெறியப்பட்டது என கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com