

சென்னை
ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி கும்பிட வந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை முதல் சாட்சி விசாரணை தொடங்கப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு சாமி கும்பிட வந்த 26 வயது இளம்பெண்ணை, திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலைய போலீஸ்காரர்களான சுந்தர், சுரேஷ் ராஜ் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில், பாதிக்கப்பட்ட பெண் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என சிறப்பு கோர்ட்டுகளுக்கு உத்தரவிடவேண்டும். தற்போது மாநிலம் முழுவதும் எத்தனை பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழ்நாடு அரசு அதிக முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, "ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ்காரர்களுக்கு எதிராக கடந்த 17-ந்தேதி குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. நாளை முதல் சாட்சி விசாரணை தொடங்கப்படவுள்ளது.
ஐகோர்ட்டு ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூலை 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாக கருதுகிறது. போக்சோ மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில் விரிவான வழிகாட்டு நெறி முறைகளை வகுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு இருவார கால அவகாசம் வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், "ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை திருவண்ணாமலை மகளிர் கோர்ட்டு விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு கோர்ட்டுகள் தமிழ்நாட்டில் எத்தனை உள்ளன? இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் போக்சோ சிறப்பு கோர்ட்டுகள் இல்லை. போக்சோ கோர்ட்டுகளின் தற்போதைய செயல்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசும், ஐகோர்ட்டு பதிவுத்துறையும் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.