

கோயம்புத்தூர்,
கேரளம் மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கீழ கேத்திர பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ் (50 வயது). மாத்தூர் வெங்கார பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (52 வயது). இவர்கள் இருவரும் அங்குள்ள தனியார் லாரி போக்குவரத்து நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கு சரக்கு ஏற்றி கொண்டு லாரியில் செல்வது வழக்கம். வெளியூர்களுக்கு நீண்ட தூரம் பயணிக்கும்போது கிருஷ்ணதாஸ் தூங்கி விடுவாராம். இதனால் மணிகண்டனே நீண்ட தூரம் லாரியை ஓட்ட வேண்டிய நிலை அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இது டிரைவர் மணிகண்டனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் லாரியில் கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். லாரியை மணிகண்டன் ஓட்டி வந்துள்ளார். அப்போது சுந்தராபுரம் அருகே லாரி சென்று கொண்டு இருந்தது. லாரியில் இருந்த கிருஷ்ணதாஸ் தூங்கியுள்ளார். இதனை பார்த்த மணிகண்டனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் கிருஷ்ணதாசிடம், லாரியை நானே ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நீ தூங்கிக் கொண்டு சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.
இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கிருஷ்ணதாசை தாக்கி ஓடும் லாரியிலிருந்து கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதனால் கிருஷ்ணதாசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணதாசின் மனைவி சரிதா, சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவரை மதுக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.