மது குடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்: மனைவி மீது தொழிலாளி நடத்திய கொடூரம்

இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மது குடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரம்
Published on

ஜீயபுரம்,

திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சின்னம்மாள் (42). இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

செந்தில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வருவதால் தம்பதி இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று செந்தில்குமார் மது குடிப்பதற்காக பணம் தருமாறு சின்னம்மாளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் தரமறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.

அடித்துக்கொலை

இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அங்கிருந்த குக்கரின் மூடியால் சின்னம்மாளின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சின்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com