பூர்வீக சொத்தை எழுதி தராததால் ஆத்திரம்: தந்தையை குத்திக்கொன்ற மகன்

நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டு மகன் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
பூர்வீக சொத்தை எழுதி தராததால் ஆத்திரம்: தந்தையை குத்திக்கொன்ற மகன்
Published on

சேலம்,

சேலம் கிச்சிப்பாளையத்தை அடுத்த சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் தனபால் (75 வயது). இவருக்கு ஸ்ரீதர் (45 வயது) என்ற மகனும், பிரியா, சத்யா ஆகிய மகள்களும் உள்ளனர். இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். சன்னியாசிகுண்டு பகுதியில் தனபால் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வந்தார். ஸ்ரீதர் சங்ககிரி பேருந்து நிலையம் அருகில் வசித்து வந்ததுடன், காய்கறி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

கிச்சிப்பாளையம் ராஜா பிள்ளைக்காட்டில் தனபாலுக்கு 10 ஆயிரம் சதுர அடியில் பூர்வீக நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஸ்ரீதர் தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று மதியம் சங்ககிரியில் இருந்து ஸ்ரீதர் சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த தனது தந்தையிடம் அந்த நிலத்தை எழுதி கொடுக்குமாறு கூறினார். அதற்கு தனபால் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர், தான் மறைத்து வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தந்தை தனபாலை மார்பு, தலையில் சரமாரியாக குத்தினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மூத்த மகள் பிரியா மற்றும் உறவினர்கள் உடனடியாக ஸ்ரீதரை தடுக்க முயன்றனர். அதற்குள் அவர் தந்தையின் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியதால் சம்பவ இடத்திலேயே தனபால் ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற ஸ்ரீதரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தையை கொலை செய்த ஸ்ரீதரை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து கொலை செய்யப்பட்ட தனபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 10 ஆயிரம் சதுர அடி நிலத்திற்காக தந்தையை அவரது மகனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com