

ராணிப்பேட்டை,
வேலூர் அடுத்த கணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன். இவர்கள் அதே பகுதியில் செங்கல் சூளை தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தவெகவின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் மேற்கண்ட செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக, கடந்த 22-ம் தேதி செங்கல் சூளை பகுதிக்குச் சென்றிருந்த த.வெ.க ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை, செங்கல் சூளை உரிமையாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் மடக்கி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்பினரிடையே கைகலப்பும் ஏற்பட்டது.
அன்றைய தினமே, த.வெ.க நிர்வாகிகள் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
த.வெ.க தரப்பிலும், ``அந்தப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளை நடக்கிறது. பர்மிட் இல்லாமலே லாரிகளில் சூளைக்கு மண் கொண்டுவருகின்றனர். திருட்டு மண் எடுக்கும்போது வீடியோ எடுத்தும், கனிவளத்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தோம். அதிகாரி வந்தபோது, புகாருக்குள்ளான சூளைகளைக் காட்டச் சொன்னதால் அவர்களுடன் த.வெ.க நிர்வாகிகளும் உடன் சென்றார்கள்.
அனுமதி இல்லாமல் மண் ஏற்றி வந்த 2 லாரிகளை அதிகாரிகள் மடக்கி எச்சரித்தார்கள். இதையடுத்து, அதிகாரிகள் சென்ற பிறகு வேண்டுமென்றே மாமூல் கேட்டுவந்ததாக த.வெ.க நிர்வாகிகள் மீது பழிசுமத்துகிறார்கள் என்று கூறினர்.
கனிம திருட்டு
கனிமத் திருட்டைத் தடுத்ததால் மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் மீதும் த.வெ.க ஒன்றியச் செயலாளர் தரப்பினர் வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகாரளித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்தநிலையில், ராணிப்பேட்டை மாவட்ட செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த, விவகாரம் தொடர்பாக கணியம்பாடி த.வெ.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி த.வெ.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடுதல் கூடாது. தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து தவெகவினர் செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர், அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுதலோ, ஆய்வுகள் மேற்கொள்ளுதலோ கூடாது.
பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எவ்வித இடையூறும் இன்றி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். கட்சியின் பெயரையோ அல்லது கட்சி பதவிகளையோ பயன்படுத்தி எவரும் தன்னிச்சையான அதிகார மையங்களாக செயல்பட கூடாது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்சியின் மாண்பை குலைக்கும் வகையில் எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என அக்கட்சி தலைமை அண்மையில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.