

சென்னை,
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளான காவியா மாறனுக்கு கடந்த நவம்பர் 11-ந்தேதி கிரீஸ் நாட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட திருமண விழாவில் ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் மற்றும் மாறன் குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதை தொடர்ந்து, இன்று (சனிக்கிழமை) சென்னையில் மணமக்களுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.
இதன்படி தமிழக முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.பி.ஐ. முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நடிகை ராதிகா, சன்ரைசர்ஸ் முன்னாள் வீரர்கள் புவனேஸ்வர் குமார், கேன் வில்லியம்சன், முத்தையா முரளிதரன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் பிரபு, இயக்குநர் தரணி உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும் வருகை தந்துள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.