அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவியும், அவருடைய சகோதரருக்கு பணி நியமன ஆணையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அனிதாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதி உதவி
Published on

சென்னை,

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செப்டம்பர் மாதம் 1ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிதி உதவி வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதாவின் குடும்பத்துக்கு, முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1.9.2017 அன்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனிதாவின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசின் நிதி உதவியாக ரூ.7 லட்சத்துக்கான காசோலையை, அனிதாவின் தந்தை சண்முகத்திடம் வழங்கினார்.

மேலும், அனிதாவின் சகோதரர் சதீஷ்குமாருக்கு சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக்கழகத்தில் (டாம்ப்கால்) இளநிலை உதவியாளருக்கான பணிநியமன ஆணையினை முதல்அமைச்சர் வழங்கினார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com