

சென்னை,
கவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை வரிசையில் 23-வது ஆளுமையாக அண்ணா குறித்த ஆய்வு கட்டுரையை நேற்று அரங்கேற்றினார். காஞ்சீபுரத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு உத்திரமேரூர் தி.மு.க. எம்.எல்.ஏ. க.சுந்தர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-
அண்ணா என்ற ஒற்றை சொல்லில் தமிழர்களின் ஒரு நூற்றாண்டு சரித்திரம் அடங்கியிருக்கிறது. அவமானப்பட்டுக்கிடந்த மானம், அடையாளமில்லாத நிலம், பாரம்பரியத்தை இழந்த மொழி, பண்பாட்டைத் தொலைத்த இனம் என்று எல்லா வழிகளிலும் இழிவடைந்து கிடந்த தாழ்ந்த தமிழகத்தை மீட்டுக்கொடுத்த அறிவுப் போராளி அண்ணா. அவர் மறைந்து அரை நூற்றாண்டுக்கு பிறகும் அவர் போட்டுக்கொடுத்த கோட்டுக்குள்ளே தான் தமிழ்நாட்டு அரசியல் இன்னும் நடந்தேறி வருகிறது. நோயுற்றுக் கிடந்த தமிழர்களுக்கு முரட்டு வைத்தியம் பார்த்தவர் பெரியார் என்றால், அன்பு வைத்தியம் பார்த்தவர் அண்ணா.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னதில் கடவுள் மறுப்பை அண்ணா நெகிழ்த்திக்கொண்டார். நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன் என்றதில் நம்பிக்கையாளர்களையும் தன்பக்கம் நகர்த்திக்கொண்டார்.
அவரது அரசியல் தமிழும், திரைத் தமிழும், இலக்கியத் தமிழும், மேடைத் தமிழும் தமிழர்களுக்கு ஒரு சங்கீதமாக இருந்தன. பண்டிதப் பொருளாக இருந்த கவிதையை பாமரப் பொருளாக்கிய பாரதியைப்போல், உயர்குடிப் பொருளாய் இருந்த உரைநடையை கல்லா மக்களின் கலைப்பொருள் ஆக்கியவர் அண்ணா என்று கருதலாம்.