பாலியல் புகாரில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சஸ்பெண்ட்

பாதிக்கப்பட்ட மாணவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
பாலியல் புகாரில் சிக்கிய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சஸ்பெண்ட்
Published on

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தமிழகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பூகம்பம் ஒன்று நேற்று வெடித்தது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் 'பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும், செல்போனில் பேசியும் பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்றும், விஷயத்தை வெளியில் சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். அதன்பேரில், இந்த புகார் மனு மீது உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் கோட்டூர்புரம் போலீசார் அதிரடியாக விசாரணையை தொடங்கினார்கள்.

இந்நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் ஞானவேல் பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. துறைரீதியான விசாரணை நடைபெற்று வரும்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அண்ணா பல்கலைகழகம் முன்பு மாணவ அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com