அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது: டிஜிபி அறிக்கை தாக்கல்


அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது: டிஜிபி அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 1 May 2025 1:00 PM IST (Updated: 1 May 2025 1:23 PM IST)
t-max-icont-min-icon

ஞானசேகரன் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது.

சென்னை,

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கைது சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஞானசேகரன் மீதான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அண்ணா பல்கலை. வழக்கில் இதுவரை 13 சாட்சிகள், மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளனர். கைதான ஞானசேகரன் மீதான பழைய திருட்டு, வழிப்பறி என மொத்தமாக உள்ள 35 வழக்குகளில், 5 வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 9 வழக்குகளில் விடுதலை ஆகியுள்ளார். மற்ற வழக்குகளில் விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஞானசேகரன் மீது பதிந்த வழக்குகளில் காவல்துறை விசாரணையில் எதுவும் நிலுவையில் இல்லை. எனவே, இவ்வழக்கில் சிபிஐ விசாரணை தேவையற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story