

சென்னை,
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு நியமனம் செய்யப்பட்டார். பொதுவாக துணைவேந்தர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி அவருடைய பதவி காலம் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் நிறைவு பெற்றது.
துணைவேந்தராக அவருடைய பதவி காலம் முடிவடைந்து இருந்தாலும், பல்கலைக்கழகத்தில் எந்திரவியல் துறையில் பேராசிரியராக பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
இதனிடையே, பேராசிரியர் பணியில் கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதியுடன் வேல்ராஜ் ஓய்வு பெற இருந்தார். ஆனால் அதே நாளில் அவரை சஸ்பெண்டு செய்து பல்கலைக்கழக சிண்டிகேட் உத்தரவு பிறப்பித்தது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கொடுத்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகவும், அந்த முறைகேட்டில் அப்போது துணைவேந்தராக இருந்த வேல்ராஜ்-க்கும் தொடர்பு இருந்ததாகவும், துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர் எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியபோது நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு வேல்ராஜ் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
அதேவேளை, பணி ஓய்வு நாளில் முன்னாள் துணை வேந்தர் வேல்ராஜை சஸ்பெண்டு செய்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி ரத்து செய்தார்.
இதையடுத்து, முறைகேடு புகாரில் சிக்கிய முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜை சஸ்பெண்டு செய்ததை ரத்து செய்த பல்கலைக்கழக வேந்தரும், மாநில கவர்னருமான ஆர்.என்.ரவியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கவர்னர் ஆர்.என்.ரவி, முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.